வறட்சியால் ஏரலில் வெற்றிலை விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள்

ஏரலில் தலைமுறை தலைமுறையாக விவசாயிகள்  வெற்றிலை விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஐப்பசி மாதம் வெற்றிலை கொடிக்கால் தொழிலை தொடங்குவார்கள். இவர்கள் ஏரலில் உள்ள வயல்களை உரிமையாளர்களிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு என கட்டுக்குத்தகைக்கு எடுத்து கான்களை தோண்டி பட்டத்தில் முதலில் அகத்தி மற்றும் முருங்கை மரம் விதை ஊன்றி அது தளிர்விட்டதும் 60 நாளில் வெற்றிலை கொடியினை நட்டு அதனை அகத்தி மற்றும் முருங்கை மரத்தில் படரவிடுகின்றனர். 5 மாதம் கழித்து வெற்றிலையை விவசாயிகள் பறிக்க தொடங்குகின்றனர். ஒரு வெற்றிலை கொடிக்கால் இரண்டரை ஆண்டுகள் வரை பலன் தரும். வெற்றிலை சக்கை, மாத்து, பொடி வெற்றிலை என தரம் பிரிக்கப்படுகிறது. சக்கை, மாத்து வெற்றிலை டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பபட்டு வந்தன. பொடி வெற்றிலை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் வெற்றிலை படரவிடுவதற்காக நடும் முருங்கையில் இருந்து காயும், அகத்தியில் இருந்து கீரையும் கிடைப்பதால் இத்தொழில் வெற்றிகரமாக ஏரலில் தலைமுறை தலைமுறையாக நடந்து வந்தது.

Advertising
Advertising

ஆண்டு தோறும் மழைக்காலத்தில் ஏரலில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தண்ணீர் தேங்கி வெற்றிலை கொடிக்கால் அழிந்து வந்தது. இதனால் வெற்றிலை விவசாயிகள் ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீரை வெளியேற்றி வெற்றிலையை கஷ்டப்பட்டு காப்பாற்றி வந்தனர். ஆனால் தற்போது வைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் வரத்து ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதால் வெற்றிலை விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகாளக அவதிப்பட்டு வந்தனர். மற்ற விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் ஓரளவாது பயிர்கள் தாங்கி நிற்கும். ஆனால் வெற்றிலை விவசாயத்திற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்சியாக வேண்டும். இல்லாவிட்டால் வெற்றிலை காய்ந்து உதிர்ந்து விடும். இந்த தண்ணீர் தட்டுபாட்டினால் கடந்த 5 ஆண்டுகாளக ஒரு சில இடங்களில் மட்டுமே ஏரலில் வெற்றிலை விவசாயம் நடந்து வந்த நிலையில் இந்த ஆண்டு வெற்றிலை விவசாயம் முற்றிலும் நடைபெறவில்லை.

இதனால் ஏரலில் வெற்றிலை கொடிக்காலே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக செய்து வந்த வெற்றிலை கொடிக்கால் விவசாயம் அழிந்து போனதால் இதனை நம்பி பிழைப்பு நடத்தி வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த தொழிலே செய்து வந்த விவசாயிகள் ஆத்தூர், சொக்கப்பழக்கரை உட்பட பிற இடங்களில் வெற்றிலை விவசாயம் செய்துள்ள பகுதிக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். சிலர் இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு தொழி லுக்கு மாறிவருகின்றனர். அரசு இந்த தொழிலை நம்பி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு மாற்று தொழில் செய்வதற்கு வட்டியில்லாத கடன்களை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: