×

பிறந்தநாள் கொண்டாட நண்பர்களுடன் சென்றபோது கார் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: இருவர் படுகாயம்

சென்னை: பிறந்தநாள் கொண்டாட நண்பர்களுடன் சென்றபோது கார் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் இறந்தனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆவடி பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (23). இவருக்கு நேற்று  பிறந்தநாள். இதை நண்பர்களுடன் சேர்ந்து புதுச்சேரியில் கொண்டாட முடிவு செய்தார். இதையடுத்து ராஜ்குமார் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சூர்யா (22), சரத் (24), பிரான்சிஸ் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டார்.  கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் சென்றபோது எதிரே சென்னை நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் திடீரென கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மேதியது. இதனால் கார்  சாலையோரத்தில் கவிழ்ந்து அப்பளம்போல் நொறுங்கியது.  காரில் இருந்த ராஜ்குமார், சூர்யா ஆகியோர் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தனர். சரத், பிரான்சிஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய டிரைவர் பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பிவிட்டார். உடனே போலீசார் அதில் இருந்த பயணிகளை மாற்று பஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த விபத்து சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED மணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி...