அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

சென்னை: விண்வெளி ஆராய்ச்சி குறித்து அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் 1 திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 12 அரசு பள்ளி மாணவர்களின் ஆய்வு மாதிரிகளை ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற தனியார் அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹீலியம் பலூன் மூலம் விண்ணிற்கு அனுப்பியது. இதையடுத்து இதை வெற்றிகரமாக தரையிறக்கியது. இந்தநிலையில், அந்த அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் 1 திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது: விக்ரம் சாராபாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த போட்டி நடத்தப்பட்டது.

Advertising
Advertising

இதில் 12 பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்களிடமிருந்து ஆய்வு மாதிரிகளை பெற்று செயற்கைகோளில் பொருத்தப்பட்டது. இது, கடந்த 11ம் தேதி ஹீலியம் பலூன் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. இது வெற்றிகரமாக விண்ணில் 1 லட்சத்து 17 ஆயிரம் அடி வரை சென்று திரும்பியுள்ளது. இதில் அனுப்பப்பட்ட மனிதனின் ரத்தம் மற்றும் டிஎன்ஏ மாதிரிகள் மாணவர்களிடமே திரும்பி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தினால் அவர்கள் மேலும் உயருவார்கள். எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாணவர்கள் இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது போன்ற வாய்ப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டால் பல இளம் விஞ்ஞானிகளை உருவாக்கிட முடியும். இவ்வாறு கூறினார்.

Related Stories: