×

சுதந்திர தினவிழா முன்னிட்டு காமராஜர், ராஜாஜி சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் வரை காமராஜர் மற்றும் ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தின விழா நாளை சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு விழா நடைபெறும் அன்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

* உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமையப்பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
* காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமிபாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலைமன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.
* பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.
* அண்ணாசாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமிசாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை  பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.
* முத்துசாமி சாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்
* சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அடையாளஅட்டை வைத்திருப்போர் காலை 8.45 மணிவரை ராஜாஜிசாலை வழியாக சென்று தலைமைச்செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு வாகனத்தைகோட்டை வளாகத்தில் நிறுத்தவேண்டும். இதே அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 8.45 மணிக்கு பின் வந்தால் கொடிமர சாலை, ஜார்ஜ் கேட் வழியாக கோட்டையை அடைய வேண்டும்.
* நீல மற்றும் பிங்க் வண்ண வாகன அட்டை வைத்திருப்போர் கொடிமரச் சாலை, ஜார்ஜ்கேட் வழியாகவோ அல்லது முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பதை வழியாக சென்று தலைமைச்செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிர்புறம் உள்ள பொதுப்பணி துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
* அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர் நினைவுச்சின்னம் அருகே இறங்கிகொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்த வேண்டும்.
* கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் மாநகர பேருந்துகள், மாணவர்களை போர் நினைவுச்சின்னம் அருகே இறக்கிவிட்ட பின் வாகனங்களை போர் நினைவுச்சின்னம் அருகே உள்ள தீவுத்திடலில் நிறுத்த வேண்டும்.

Tags :
× RELATED மணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி...