×

சொத்து தகராறில் பயங்கரம் பெண் படுகொலை: கொடூர தம்பி கைது,..புழல் அருகே பரபரப்பு

புழல்: புழலில் சொத்து தகராறில் இரும்பு கம்பியால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர். புழல் அடுத்த கொளத்தூர் புதிய லட்சுமிபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இறந்துவிட்டார். இவரது மனைவி மல்லிகா (52). தம்பதிக்கு சங்கர் என்ற மகன் மற்றும் சரளா என்ற மகள் உள்ளனர். சரளா தனது கணவருடன் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டிலும், சங்கர் புதிய லட்சுமிபுரத்திலும் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். கணவர் இறந்ததால் மகள் சரளாவின் வீட்டில் மல்லிகா வசித்து வந்தார். நேற்று முன்தினம்  மாலையில் சங்கர் வீட்டுக்கு மல்லிகா வந்தார். சங்கர் வீட்டின் அருகே, மல்லிகாவின் தம்பி நந்தகுமார் (44) வசித்து வருகிறார். அப்போது மல்லிகாவுக்கும், நந்தகுமாருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.

இருவரும் வாக்குவாதம் செய்த நிலையில், ஆத்திரம் அடைந்த மல்லிகா இரவு 9 மணிக்கு மகள் சரளா வீடான வேப்பம்பட்டுக்கு புறப்பட்டார். அதே பகுதியில் தனியாக நடந்து வந்தபோது பின்னால் வந்த நந்தகுமார் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் அக்கா மல்லிகாவை அடித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மல்லிகா ரத்த வெள்ளத்தில் துடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் நந்தகுமார் தப்பி ஓடினார். தகவலறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மல்லிகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர். பின்னர், நேற்று திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED மணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி...