×

அம்பத்தூர், மங்களபுரத்தில் உடைந்த கால்வாயை சீரமைக்காமல் சாலை பணி: பொதுமக்கள் கடும் அதிருப்தி

அம்பத்தூர்: சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம், 85வது வார்டு மங்களபுரத்தில் உள்ள 600க்கு மேற்பட்ட வீடுகளில் 2000க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் தலித் சமுதாயத்தை சார்ந்தவர்கள். இங்கு குள்ளன் தெரு, பஜனை கோயில் தெரு, பாடசாலை தெரு, நல்ல கிணறு தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் அம்பத்தூர் நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய்களை கடந்த 8 ஆண்டாக மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மங்களபுரத்தில் உள்ள அனைத்து கால்வாய்கள் பல இடங்களில் உடைந்து கிடக்கின்றன. ஒப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முடிந்தும் வீடுகளுக்கு கழிவுநீர்  இணைப்பு கொடுக்கவில்லை. இதனால், கால்வாயில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்கள் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு மர்ம காய்ச்சலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றத்தால்  சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், தெருக்களில் செல்லும் பாதசாரிகள் மூக்கை பிடித்து கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் தற்போது, மேற்கண்ட பகுதியில் புதிதாக சாலை போடும் பணி நடைபெறுகிறது. இங்குள்ள சேதமடைந்து இருக்கும் கால்வாய்களை சீர் அமைக்காமல் சாலை பணிகளை மேற்கொள்வதால் எந்த பயனும் இல்லை. குறிப்பாக, மழைக்காலத்தில் தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாது. மேலும், தண்ணீர் சாலையிலேயே தேங்கி நிற்கும்.  இதோடு மட்டுமல்லாமல், பாதாள சாக்கடை திட்டம் முடிந்தும் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது.

மேலும்,  பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் போது  சாலையை தோண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், புதிதாக பல லட்சம் செலவில் போடப்படும் சாலை வீணாகி போய் விடும் நிலை ஏற்படும். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் முதற்கட்டமாக உடைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும், பாதாள சாக்கடை இணைப்புகளை வீடுகளுக்கு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு, புதியதாக சாலையை தரமாக அமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.


Tags :
× RELATED மணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி...