ஆர்.கே.பேட்டை அருகே குண்டும் குழியுமான ஜி..சிஎஸ்.கண்டிகை தார்சாலை

பள்ளிப்பட்டு, ஆக.14: ஆர்.கே.பேட்டை அருகே குண்டும் குழியுமான தார்சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்.கே. பேட்டையை அடுத்த ஜி.சி.எஸ் கண்டிகையிலிருந்து ஜி.சி.எஸ் கண்டிகை காலனி சாலையை வங்கனூர், ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், ஜி.சி.எஸ் கண்டிகை, நொச்சிலி, புச்சிரெட்டிப்பள்ளி, கிருஷ்ணாகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை வழியாகத்தான் விசைத்தறி நெசவாளர்கள் தங்கள் தொழில் சம்பந்தப்பட்ட பாவு, நூல் ஆகியவற்றை மோட்டார் சைக்கிள்களில் எடுத்து வருகின்றனர். இதேபோல், விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான இடு பொருட்களை எடுத்து வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி  மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் ஆகியோரும் இச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், இத்தார் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் இச்சாலை வழியாக செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்லும் போது விழுந்து காயமடைகின்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. விசைத்தறி நெசவாளர்கள் பாவு, நூல், பீஸ்கள் இரு சக்கர வாகனங்களில் எடுத்து வரும்போது பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினாலும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, இச்சாலையை சீரமைக்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஆவடி, அம்பத்தூர் பகுதி சிடிஎச்...