ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி சிவன் கோயிலில் பிரதோஷ விழா

ஊத்துக்கோட்டை, ஆக. 14:  ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி சிவன் கோயிலில்  மகா பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது.ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்தில் சுருட்டபள்ளி கிராமத்தில்  புகழ் பெற்ற ஊபள்ளிகொண்டீஸ்வரர் கோயில்  உள்ளது. சிவன் கோயில்களில்  எங்குமே லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமான் இந்த கோயிலில்  மனித வடிவில் பள்ளிகொண்ட நிலையில்  இருப்பது  இங்கு மட்டும்தான். பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலையிலேயே விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா,  தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, பள்ளி கொண்டீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

பின்னர், மாலை 5  மணியளவில் வால்மீகீஸ்வரர் எதிரே உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அருகம்புல்,  வில்வ இலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை  காட்டப்பட்டது. இப்பூஜைகளை தலைமை குருக்கள் கார்த்திகேசன் சிவாச்சாரியார்  செய்தார். இப்பிரதோஷ விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரதோஷத்திற்காக சென்னை கோயம்பேடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி போன்ற போக்குவரத்து பணிமனைகளில் இருந்து சிறப்பு பஸ்கள்  இயக்கப்பட்டன.

Tags :
× RELATED திருத்தணி கோட்ட நெடுஞ்சாலையில் சாலை ஓர முட்புதர்களால் விபத்து அபாயம்