×

நடவடிக்கை எடுக்காத அதிகாரியை கண்டித்து இலத்தூர் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

செய்யூர், ஆக. 14: இலத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வரவில்லை என, பொதுமக்கள் கொடுத்த புகார் மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். அவரது அலட்சிய பதிலை கேட்ட பொதுமக்கள், குடிநீருக்காக நாங்கள் எங்கே சென்று அலைவது என சரமாரியாக கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செய்யூர் தாலுகா இலத்தூர் ஒன்றியம் பெரியவெளிக்காடு ஊராட்சியில் பின்னங்கண்டை கிராமம் உள்ளது. இங்குள்ள 3 தெருக்களில், 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள அனைத்து தெருக்களிலும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குறைந்ததால், போதிய குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், விநியோகம் செய்யப்படும் குடிநீரையும், 10க்கும் மேற்பட்ட தனிநபர்கள், அவரவர் வீடுகளில் விதிகளை மீறி மின் மோட்டார் பொறுத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், மேடாக உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடந்த 2 மாதமாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர், இலத்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமாரை சந்தித்து புகார் கொடுக்க சென்றனர். அவர்களை, அலுவலரின் உதவியாளர் சில மணிநேரம் தடுத்து நிறுத்தினார். ஆனால், கிராம மக்கள் அதனை ஏற்காமல், அதிகாரியின் அலுவலகத்துக்கு சென்று, அலுவலரிடம் புகார் மனு கொடுத்தனர். மேலும், குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மனுவை கண்டுகொள்ளாமலும், அவர்களுக்கு உரிய பதில் அளிக்காமலும், அலட்சியப்படுத்தும் விதமாக தனது பணியினை, துணை வட்டார வளர்ச்சி துணை அலுவலர் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராமமக்கள், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அலுவலர் தற்போது பணியாளர்கள் யாரும் இல்லை. அதனால், கொடுத்த புகாரின் மீது அடுத்த வாரம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதுவரையில் குடிநீருக்கு நாங்கள் எங்கு செல்வது. உடனடி  நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் இலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிலமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...