பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்து கிடக்கும் காலவாக்கம் ஏரி

திருப்போரூர், ஆக. 14: பல ஆண்டுகளாக தூர்வாரி முறையாக பராமரிக்காததால், காலவாக்கம் ஏரியில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழை காலம் தொடங்குவதற்கு முன், ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் செங்காடு  செல்லும் சாலையில் பெரிய ஏரி உள்ளது. ஒரு காலத்தில் காலவாக்கம் விவசாய  கிராமமாக இருந்தபோது, சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள், இந்த ஏரி மூலம் பாசன  வசதி பெற்றன. தற்போது நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக ஏரியை சுற்றி  கல்லூரிகள், வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி  விட்டதால் காலவாக்கம் கிராமத்தில் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த ஏரி  விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும்  கழிவுநீர், இந்த ஏரியில் விடப்படுகிறது. மேலும்,  ஏரியைச் சுற்றிலும் குடியிருப்புகள் உருவாகி வருவதால், பல்வேறு இடங்களில்  இருந்து வெளியேறும் கழிவுநீரும் இந்த ஏரியில் சென்று சேர்கிறது.

கடந்த  2015ம் ஆண்டு பெய்த கனமழையின்போது, இந்த ஏரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு  சேமிக்கப்பட்டு இருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேறியது. பொதுப்பணித் துறை  சார்பில் உடைந்த கரை மட்டும் சீரமைக்கப்பட்டது. அதேபோன்று 2006ம்  ஆண்டிலும், 2012ம் ஆண்டிலும் ஏரியை தூர் வாருவதாக கணக்கு காட்டப்பட்டு,  ஏரியில் மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டது.ஆனால் முறையாக மண் அள்ளப்படாததால் ஏரியின் பல இடங்களில் மேடும் பள்ளமுமாக காணப்படுகிறது. மேலும் ஏரி  முழுவதும் பல்வேறு செடிகள் முளைத்து புதர் மண்டி உள்ளது. எனவே, மழைக்காலம்  தொடங்குவதற்கு முன், காலவாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை சீரமைத்து  தர  வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED தலித் சேனா அமைப்பு செயற்குழுக் கூட்டம்