பழைய மாமல்லபுரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை முடங்கியது

திருப்போரூர், ஆக.14: வாழ்க்கையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் உள்ளவர்கள் வங்கியிலோ, வேலை செய்யும் நிறுவனத்திலோ கடன் வாங்கி அரை கிரவுண்ட் மனை வாங்குவதற்குள் படாத பாடு பட்டு விடுகின்றனர்.
ஒரு கால கட்டத்தில் மனை வாங்கி வீடு கட்ட முடியாத அளவுக்கு சென்னை புறநகர் பகுதியில், விலைவாசி உயர்ந்தது. மேலும் இடம் வாங்கினாலும் அதை பாதுகாப்பது குறித்தும் தினமும் வேலைக்கு போய் கொண்டே வீடு கட்டுவதில் உள்ள சிரமத்தை கணக்கில் கொண்டும் மனைகளை வாங்காமல் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதில் பொதுமக்கள் யோசித்தனர்.இதையொட்டி பழைய மாமல்லபுரம் சாலையில், வீட்டுமனை விற்பனை மந்தமாகி அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த 2005ம் ஆண்டு கந்தன்சாவடியில் இருந்து கேளம்பாக்கம் வரை ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கியது.அப்போது சதுர ₹2000க்கு விற்பனை செய்யப்பட்டது. 2014ம் ஆண்டு ₹10,000 வரை உயர்ந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல்குளம், ஜிம், விளையாட்டு அரங்கங்கள் உள்பட மனதை மயக்கும் வசதிகள் வழங்கப்பட்டன. இதனால் உயர் வருவாய் பிரிவினர், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க போட்டி போட்டனர்.
இதனால், கடந்த 2005 முதல் 2015 வரை 10 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் அதிவேக வளர்ச்சிக்கு பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு கிரவுண்ட் மனை குறைந்தது ₹35 லட்சம் முதல் ₹80 லட்சம் வரை விலைபோகிறது.

அவ்வளவு விலை கொடுத்து வாங்கி அதில் ₹10 லட்சத்தில் வீடு கட்ட முடியாது. குறைந்தபட்சம் ₹30 லட்சம் வேண்டும். எனவே, சுமார் ₹1 கோடி இருந்தால், தனி வீடு கனவு நிறைவேறும். இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கி வைத்தால், மட்டுமே கட்டுப்படியாகும் என்ற நிலை மக்களுக்கு ஏற்பட்டது. தற்போது வரை ராஜிவ் காந்தி சாலையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் புதிதாக கட்டப்படுகின்றன. கடந்த 2015 டிசம்பரில் வந்த பெரு வெள்ளம், இந்த ரியல் எஸ்டேட் துறையை சுழற்றி அடித்தது. பாசன வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்வாய்கள், ஏரி மதகுகள், குளம், குட்டைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுரஅடி ₹6000க்கு விற்ற அடுக்குமாடி குடியிருப்புகள், தற்போது ₹2000 குறைந்து 4000க்கு விற்றால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நான்கைந்து வீடுகள் கட்டும் சிறிய பில்டர் முதல் 30 மாடிகள் வரை கட்டும் பெரிய பில்டர் வரை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

விற்பனை மந்தம், கட்டுமான பொருட்களின் விலையேற்றம், மணல் தட்டுப்பாடு, தொழிலாளர் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் கட்டிடப்பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தொழிலை நம்பி வந்த பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் கடன் வாங்க முடியாமல், தற்போது தங்கள் ஊருக்கே திரும்பி விட்டனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பு தொழில் முற்றிலுமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு பத்திரப்பதிவின்போது ஏதேனும் சலுகை வழங்கினால் மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை விற்பனை செய்ய இயலும் என்றும், பாதியில் நிற்கும் கட்டிடப்பணிகளை முடித்து விற்பனைக்கு கொண்டு வர இயலும் என்று கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.

களை கட்டும் வீட்டுமனை பிஸ்னஸ்
கட்டுமான தொழிலில் ஒரு பக்கம் வீழ்ச்சி ஏற்பட்டாலும், மீண்டும் மக்கள் வீட்டு மனைகளின் பக்கம் திருப்பியுள்ளனர். நீதிமன்ற நடவடிக்கையின் காரணமாக அரசு அங்கீகாரம் பெறாமல் வீட்டு மனைகளை விற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பலரும் வேறு வழியின்றி முறையான வீட்டுமனை அங்கீகாரத்தை பெற்று சிறியளவில் குறைந்த வருவாய் பிரிவினருக்கான மனை விற்பனையை தொடங்கி உள்ளனர். இதனால், 600 சதுரடி முதல் 1200 சதுரடி வரை உள்ள மனைகள் ஓரளவுக்கு விற்க தொடங்கியுள்ளன. இதனால் பழைய மாமல்லபுரம் சாலையில் புதிய வீட்டு மனைகளின் விற்பனைகளை கட்டத் தொடங்கி உள்ளது.

Tags :
× RELATED அறிவியல் செயல்திட்டம் போட்டியில்...