மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா

உத்திரமேரூர், ஆக.14: உத்திரமேரூர் பஜார் வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நடுத்தெரு மாரியம்மன் கோயிலில், ஆடிமாத கூழ்வார்த்தல் திருவிழா கடந்த வாரம் 4ம் தேதி கொடியேற்றத்துடன், அம்மனுக்கு காப்பு கட்டி துவங்கியது.
முதல் 10 நாட்களும் உற்சவர் ஸ்ரீமாரியம்மன் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 கிராமங்களிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, உத்திரமேரூரில் டவுன் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தார தப்பட்டை முழங்க, மேளதாளத்துடன் வீடு வீடாக சென்று, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு பக்தர்கள் தீபாரதனை காட்டி தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதையடுத்து, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்தும், நெய் தீபம் ஏற்றியும், கொழுக்கட்டை பொம்மைகள் செய்து அம்மனுக்கு படையலிட்டு, கோயிலை வலம் வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். நேற்று அதிகாலை 4 மணியளவில் உற்சவ அம்மன் கோயிலை வந்தடைந்ததும், காப்பு அவிழ்க்கப்பட்டது.விழாவையொட்டி கோயில் வளாகத்தில் தெருக் கூத்து நிகழ்ச்சி நடந்தது. இதில் உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தலித் சேனா அமைப்பு செயற்குழுக் கூட்டம்