×

மாமல்லபுரம் கடற்கரை கோயிலை இரவு 9 மணிவரை பார்க்க அனுமதி

மாமல்லபுரம், ஆக. 14: மாமல்லபுரம் கடற்கரை கோயிலை, இரவு 9 மணி வரை பார்க்க, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை கோயில் உள்ளது. கடந்த 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படும் வரும் இந்த கடற்கரை கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக (லோகோ) உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக மாமல்லபுரம் கடற்கரை கோயிலை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த 2018-2019 மார்ச் வரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 65 ஆயிரம் பேர், இந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 12 லட்சம் பேர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலை பார்த்ததாகவும், இதன் மூலம் ₹7 கோடி வருவாய் கிடைத்ததாகவும் தொல்லியல் துறையின் குறிப்பு கூறுகிறது.

மாமல்லபுரம் கடற்கரை கோயில் மட்டுமின்றி ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, முகுந்தராயர் மண்டபம் உள்பட ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன. இந்த சின்னங்களை பொதுமக்கள் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை பார்வையிட தொல்லியல் துறை அனுமதி அளிக்கிறது. ஆனாலும், இரவிலும் பார்க்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை ஆய்வு செய்தது. இதில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், டெல்லியில் உள்ள ஹூமாயூன் கல்லறை, சப்தர்ஜங் கல்லறை, கர்நாடகாவில் உள்ள உடுப்பி கோயில்கள், கஜுராஹோ சிற்பங்கள் அடங்கிய கோயில் ஆகியவற்றை முதல்கட்டமாக இரவு 9 மணிவரை பார்வையிட தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

இதைதொடர்ந்து, இரவில் பார்ப்பதற்காக இந்த புராதன சின்னங்களை சுற்றி மின்விளக்குகள் அமைத்தல், கூடுதல் பாதுகாவலர்கள் நியமித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள இருப்பதால், அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் வரும் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை அனுமதி கிடைப்பதால் கால தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரை கோயிலை பார்க்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...