×

இன்ஸ்பெக்டரை திட்டிய விவகாரம் காஞ்சி கலெக்டரை கண்டித்து போஸ்டர்

காஞ்சிபுரம், ஆக.14: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவத்தில், இன்ஸ்பெக்டரை, கலெக்டர் பொன்னையா அனைவர் முன்னிலையிலும் கடிந்து கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து காஞ்சிபுரம் முழுவதும், கலெக்டருக்கு எதிராக ஓய்வுபெற்ற காவல்துறை நலச்சங்கத்தினர் சார்பில், கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போலீசார் உரிய பாஸ் இல்லாமல் உள்ளே அனுமதித்து வருவதால், விஐபி வரிசையில் தினமும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதுபற்றி பக்தர்கள், தொடர்ந்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பலரிடமும் விஐபி பாஸ் இல்லாதது தெரிந்ததும், அவர்களை அனுமதித்த இன்ஸ்பெக்டரை கடிந்து கொண்டார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் கலெக்டருக்கு எதிர்ப்பலையை ஏற்படுத்தியது.

பின்னர் இன்ஸ்பெக்டரை கண்டித்தது தனிப்பட்ட தனிநபரை கண்டித்தது கிடையாது, பணியின்போது முறையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் வெளிவந்த வார்த்தைகள். அதை பெரிதுபடுத்த வேண்டாம் என கலெக்டர் பொன்னையா மற்றும் எஸ்பி கண்ணன் கூட்டாக தெரிவித்தனர். அதன்பிறகும் காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற காவல்துறையினர் நலச்சங்கம் என்ற பெயரில் கலெக்டருக்கு எதிராக கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு