குடந்தையில் பரபரப்பு டாஸ்மாக் கடைகளின் தாக்கத்தால் வயல்களில் பாட்டில் பொறுக்குவது தான் எங்களது வேலையாக உள்ளது

கும்பகோணம், ஆக. 14: டாஸ்மாக் கடையின் தாக்கத்தால் வயல்களில் பாட்டில்களை பொறுக்குவது தான் எங்களது வேலையாக உள்ளது என்று கும்பகோணத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.கும்பகோணத்தில் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்டிஓ வீராச்சாமி தலைமை வகித்தார். தாசில்தார்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகளின் விவாதம் வருமாறு:தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் கண்ணன்: தூர்வாரும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். பாபநாசம் பகுதியில் ஜமாபந்தி பணிகள் முறையாக நடைபெறவில்லை. காவிரியில் ஒரு சில நாட்களில் தண்ணீர் வரவுள்ளது. இந்த நிலையில் இந்த அரசு ஒவ்வொரு வேலையையும் பெயரளவுக்கு செய்கிறது. இந்த அவசர கதியான வேலைகளால் எந்த பலனும் இருக்காது.உழவர் விவாதக்குழு தலைவர் ராம தியாகராஜன்: மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையும். வாய்க்கால்களை தூர்வார வேண்டும். டாஸ்மாக் கடையின் தாக்கத்தால் ஒவ்வொரு வயல்களிலும் பாட்டில் பொறுக்குவது தான் விவசாயிகளின் வேலையாக உள்ளது.

Advertising
Advertising

காவிரி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் விமலநாதன்: இந்த நிர்வாகம் திராணியற்ற நிர்வாகமாக உள்ளது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசின் சார்பில் உயரதிகாரிகள் பங்கேற்கவில்லை. பெயரளவுக்கு அனுப்பப்பட்ட அலுவலரால் என்ன பதிலை நாம் எதிர்பார்க்க முடியும். கஜா புயல் பாதிப்பு, சம்பா சாகுபடி பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளுடன் நாம் இருக்கிறோம். சம்பா சாகுபடி தொடங்கி விட்டது. ஆனால் அரசு சார்பில் இடுபொருட்கள் எந்த அலுவலகத்திலும் இல்லை. சென்ற ஆண்டைவிட நெல்லுக்கு ரூ.135 குறைத்து என அறிவித்துள்ளனர். மாநில அரசு இதற்கான ஊக்கத்தொகையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சம்பா, தாளடி கொள்முதல் கொள்கை குறித்து அரசு அறிவிக்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 குறைந்தபட்சமாக அறிவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் கடன் கொடுப்பதில் பாராபட்சம் உள்ளது. இது விவசாயிகளை ஏமாற்றும் செயல். இந்தாண்டு தொகுப்பு திட்டம் குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்கவில்லை. நாங்கள் வேளாண் துறை அமைச்சரை சந்தித்து குறுவை தொகுப்பு திட்டத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றோம். அமைச்சர் சட்டமன்ற கூட்டதொடர் நடந்து வருகிறது. அதில் முதல்வர் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்கவுள்ளார் என்றார். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கவில்லை.

நீங்கள் சாப்பிடுகிற ஒவ்வொரு சோறும் எங்கள் வேர்வையால் உருவானது. அதை மனதில் கொண்டு விவசாயிகளுக்கு நல்லது செய்யுங்கள். புதிய மின் இணைப்பு வழங்குவதில் குளறுபடி உள்ளன. விவசாயிகளுக்கு பல்வேறு முறையில் நெருக்கடி இருக்கிற சூழலில் மின்வாரியம் தனது விதிகளை தளர்த்த வேண்டும் என்றார்.கூட்டத்தில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து, தோட்ட கலைத்துறை, வேளாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: