திருவிசநல்லூரில் மின்கம்பத்தில் வாகனம் மோதி அறுந்து தொங்கிய மின்கம்பிகளால் போக்குவரத்து பாதிப்பு

கும்பகோணம், ஆக. 14:கும்பகோணம் அடுத்த ஆடுதுறை வீரசோழன் ஆற்றில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால் அனைத்து வாகனங்களும், கல்லணை பூம்புகார் சாலையில் உள்ள திருவிசநல்லூர் வழியாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக விடுமுறை என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் குறுகிய சாலையில் சென்று வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவிசநல்லூர் வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மின்கம்பத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மின்கம்பம் சாய்ந்ததால் அதில் உள்ள மின்கம்பிகள் சாலையின் குறுக்கே ஆபத்தான நிலையில் தாழ்வாக தொங்கியது. இதனால் இப்பாதை வழியே வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தது. இதனையறிந்த கிராம மக்கள், தாழ்வாக தொங்கி கொண்டிருந்த பகுதியில் வாகனங்கள் எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வழி ஏற்படுத்தினர். பின்னர் திருவிடைமருதூர் போலீசார் மற்றும் மின்சாரத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மின் ஒயரை சீர் செய்தனர். இதையடுத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றது. இதனால் கல்லணை- பூம்புகார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில்...