பாபநாசம் அருகே குடமுருட்டி ஆற்றின் படித்துறைக்கு செல்ல பாலம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பாபநாசம், ஆக. 14: பாபநாசம் அருகே குடமுருட்டி ஆற்றின் படித்துறைக்கு செல்ல பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.பாபநாசம் வங்காரம்பேட்டை, எம்ஜிஆர் நகர், அரையபுரம், வன்னியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். வங்காரம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் கரையில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. வங்காரம்பேட்டையில் இருந்து குடமுருட்டி ஆற்றின் படித்துறைக்கு செல்ல கோபுராஜபுரம் வாய்க்காலை கடந்து தான் செல்ல வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் வாய்க்கால் மீது போடப்பட்டிருந்த பாலம் இடிந்து போனது. இதனால் முனியாண்டவர் கோயில் திருவிழாவுக்காக வாய்க்காலின் மீது மண்ணை நிரப்பி பாதை அமைத்து அப்பகுதி பொதுமக்கள் அக்கரைக்கு சென்று வந்தனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ள நிலையில் வாய்க்காலில் தண்ணீர் வந்தால் தண்ணீர் செல்ல ஏதுவாக வாய்க்காலின் மீதுள்ள மண் மேட்டை அகற்ற நேரிடும். இதனால் குடமுருட்டி ஆற்றின் படித்துறைக்கு செல்ல அப்பகுதி மக்கள் அவதிப்படுவர்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் குளிக்க உள்ளிட்ட தேவைகளுக்கு குடமுருட்டி ஆற்றின் படித்துறைக்கு செல்ல பாலம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். ஏற்கனவே இருந்த பாலமானது 5 ஆண்டுகளுக்கு முன் இடிந்தது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடமுருட்டி ஆற்றின் கரைக்கு செல்ல நிரந்தரமாக பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.

Advertising
Advertising

Related Stories: