ஏரி, குளங்கள் நிரம்ப கல்லணையில் இருந்து தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும்

சேதுபாவாசத்திரம், ஆக. 14: சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி,குளங்கள் நிரம்ப கல்லணையில் முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்து 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தனர்.இந்தாண்டு மேட்டூர் அணை 100 அடியை நெருங்கிய நிலையில் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் மேட்டூர் தண்ணீர் வந்தடைந்தவுடன் கல்லணை திறக்கப்படவுள்ளது. கல்லணையில் இருந்து முழு கொள்ளளவான 4,500 கன அடி தண்ணீர் திறந்தால் தான் கடைமடை வரை தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். கல்லணையில் இருந்து வரும் தண்ணீர் ஈச்சன்விடுதி என்ற இடத்தில் பிரியும் வாய்க்கால் வழியாக நவக்குழி என்ற இடத்தில் புதுப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு இருபிரிவுகளாக வந்து சேர்கிறது.ஈச்சன்விடுதியில் 450 கன அடி முழு கொள்ளளவு தண்ணீர் எடுத்தால் தான் கடைமடையை தண்ணீர் எட்டி பார்க்கும். முறை வைக்கப்படாமல் தொடர்ச்சியாக 30 நாட்கள் தண்ணீர் வந்தால் தான் ஏரி, குளங்களை நிரப்ப முடியும். அதேநேரம் தற்போது திறக்கப்படும் தண்ணீரை கொண்டு ஏரிகள் நிரப்பப்படும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

இதுகுறித்து கடைமடை விவசாயிகள் கூறும்போது, தஞ்சை மாவட்டம்சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக போதுமான மழை இல்லதாததால் வறண்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை காலதாமதமாக திறக்கப்பட்ட நிலையில் சம்பா சாகுபடிக்கு நாற்றுவிட ஆடிப்பட்டம் கைவிட்டுபோன நிலையில் கடைமடை விவசாயிகள் சாகுபடியைகூட கருத்தில் கொள்ளாமல் குடிநீர் பஞ்சத்தை முதலில் போக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டும் என்ற நிலையில் ஏரி, குளங்களை நிரப்ப மும்முரமாக இருந்து வருகிறோம். 200க்கும் மேற்பட்டசிறு சிறு குளங்கள் மற்றும் ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், பெருமகளூர், சோலைக்காடு, விளங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள 1,500 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பினால் தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது கடைமடையில் நீர்மட்டம் 250 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதற்கு கடைமடை பகுதியில் இதுவரை போதுமான மழை பெய்யாததே காரணம். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் மழை பெய்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்படுகிறது.இதை பயன்படுத்தி ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பும் வரை இன்னும் 30 நாட்களுக்கு கடைமடை பகுதிக்கு முறைவைக்காமல் தொடர்ச்சியாக ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீர் வழங்க வேண்டும். முழுமையாக முறை வைக்காமல் தண்ணீர் வழங்கினால் கடந்த 5 ஆண்டுகளாக கைவிட்டுபோன ஒருபோக சம்பா சாகுபடிக்கு நாற்று விடும் பணிகளும் நிறைவடைந்து விடும். அதேநேரம் ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பி விடும். எனவே கடைமடை பகுதிக்கு கவனம் செலுத்தி 30 நாட்களுக்கு முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் வழங்க கலெக்டர் அண்ணாதுரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: