×

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 18 பைக்குகள் பறிமுதல்

நாகர்கோவில், ஆக.14: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் காணப்பட்ட 18 பைக்குகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.சுதந்திர தினத்தையொட்டி ரயில்வே பாதுகாப்பு படையினர் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் வரும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பாக சோதனை நடத்தினர். ‘ஆப்ரேஷன் நம்பர் பிளேட்’ என்ற பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ரயில் நிலைய கட்டுப்பாட்டு பகுதிக்குள் சட்ட விரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், பல நாட்கள் கேட்பாரற்ற நிலையில் காணப்பட்ட வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்டன.

 கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை இந்த சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் திருவனந்தபுரம் ரயில்வே  கோட்டத்தில் மட்டும் 3 நான்கு சக்கர வாகனங்கள், 167 பைக்குகள் என்று மொத்தம் 170 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
 நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மட்டும் 18 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் திருட்டு மற்றும் குற்றங்களுக்கு பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகனங்கள் காணாமல் போனவர்கள் இது தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலர்களை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags :
× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை