×

மீன்பொடி ஏற்றுமதிக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய கோரி சின்னமுட்டம், குளச்சல் மீனவர்கள் வேலை நிறுத்தம்

கன்னியாகுமரி, ஆக.14:  மீன்தூள், மீன் எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி.,  வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, குளச்சல் மற்றும் சின்னமுட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 13 மீன் தூள்,  மீன் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மீன் தூள் மற்றும் மீன் எண்ணெய்களுக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி  வரி விதிக்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 31ம்தேதி, இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. கடந்த 2017  ஜூலை 1ம்தேதி முதல் முன் தேதியிட்டு 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை கட்ட வேண்டும் என்று தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்ய கோரி, கன்னியாகுமரி சின்னமுட்டம்  மீன்பிடி துறைமுகத்தை  சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கோழி தீவன சிறுமீன் வியாபாரிகள் சங்க  தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு  உரிமையாளர் சங்க தலைவர் வானவில்சகாயம், செயலாளர் ரெஜிஸ், பங்கு பேரவை துணை  தலைவர் நாஞ்சில் மைக்கேல், மகிழ்ச்சிமாதா விசைப்படகு உரிமையாளர் சங்க  தலைவர் செல்வம், சில்வவெஸ்தர், அந்தோணிபட்டம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தால் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதுகுறித்து சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரெஜீஸ்  கூறியதாவது:மத்திய அரசு விதித்த 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை தொழிற்சாலைகள் உடனே கட்டுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதோடு, நிறுவனங்களின் வங்கி கணக்கையும் முடக்கி வருகின்றனர். மத்திய அரசின் இந்த  மக்கள் விரோத போக்கை கண்டித்து, கடந்த 9ம்தேதி முதல் 13 தொழிற்சாலைகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் மீன்களை  தொழிற்சாலைகளுக்கு  விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

குளச்சல்: இதே கோரிக்கையை வலியுறுத்தி குளச்சலில் விசைப்படகினர், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள் நேற்று அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் மீன்கள் விற்பனை செய்யப்படவில்லை. படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவை விற்பனை செய்யப்படாததால் ஏலக்கூடத்தில் மீன்கள் தேக்கமடைந்தது.  இது குறித்து குளச்சல் விசைப்படகு சங்க தலைவர் பிரான்சீஸ், செயலாளர் பிராங்கிளின், துணைத்தலைவர் அந்திரியாஸ், பொருளாளர் ஜெயசீலன், துறைமுக வியாபாரிகள் மற்றும் ஏலக்காரர்கள் சங்க தலைவர் வர்கீஸ், செயலாளர் ஆன்றனிராஜ் ஆகியோர் கூட்டாக கூறியுள்ளதாவது:மீன் பவுடருக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தற்போது அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. முழு ரத்து அறிவிப்பை அரசு அறிவிக்கும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags :
× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை