×

சுதந்திர தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபடுகின்றனர்

திருவாரூர், ஆக.14: சுதந்திர தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட உள்ளனர் என எஸ்பி துரை தெரிவித்தார்.நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அசம்பாவித சம்பவம் ஏற்படாத வகையில் வழக்கத்திற்கு மாறாக நாடு முழுவதும் போலீசார் மற்றும் ராணுவத்தினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.இந்நிலையில் தற்போது மத்திய அரசு மூலம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உஷார் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் நாளை (15ம் தேதி) நாட்டின் 73 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக மாவட்ட எஸ்பி துரை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் ,ரயில் நிலையம் ,மருத்துவமனை,வங்கிகள் மற்றும் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதுமட்டுமன்றி தங்கும் விடுதிகள் மற்றும் திரையரங்குகளில் தணிக்கை செய்யும் பணியும் நடைபெறுகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயில், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் ,ஆலங்குடி குரு கோயில் மற்றும் முத்துப்பேட்டை தர்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பணி வழங்கப் பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திர தினத்தை கொண்டாடு மாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு எஸ்.பி.துரை தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...