×

சிறுபான்மை இன மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை

திருவாரூர், ஆக. 14: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெற கல்வி நிலையங்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலும் மற்றும் ஐ.டி.ஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்பில் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு தேசிய கல்வி உதவித் தொகையானது www.scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக மத்திய அரசின் மூலம் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் மேற்காணும் இணைய தளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும்.

எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித்தொகை பெற இந்த இணையத்தில் பதிவு செய்துள்ளதையும், பயனீட்டாளர் குறியீடு மற்றும் எண் பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணையத்தில் கல்வி நிலையத்தினை பதிவு செய்வதற்கு கல்வி நிலைய முதல்வர், தலைமையாசிரியர் ஆகியோரின் கோரிக்கை கடிதம், (சுய ஒப்பமிட்டது) மற்றும் பெயர், தொலைபேசி எண், கல்வி நிலையத்தின் முழு முகவரி, மற்றும் வேறு இதர விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் கல்வி நிலையங்கள், தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்வதற்கான கடைசிதேதி வரும் 31ம் தேதி என்பதால் அதற்குள் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள் உரிய காலத்தில் இணைய தளத்தில் பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு