×

போர்வெல் நீரை குடிக்கும் அவலம் மன்னார்குடி 32வது வார்டில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஆணையரிடம் பெண்கள் மனு

மன்னார்குடி, ஆக. 14: மன்னார்குடி 32 வது வார்டு ஆர்பி சிவம் நகர் மற்றும் பாரி நகரை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்து வலியுறுத்தினர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 32 வது வார்டு ஆர்பி சிவம் நகர், பாரி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 250 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக அருகில் உள்ள பைபாஸ் சாலை மற்றும் வஉசி சாலைகளில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர்விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீரை வேறு பகுதிகளுக்கு மாற்றி விட்டு ஆர்பி சிவம் நகர், பாரி நகர் பகுதி மக்களுக்கு அதே பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான புல் வளர்க் கும் பண்ணையில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு கடந்த 1 வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.தற்போது விநியோகம் செய்யப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக குற்றம்சாட்டியும் பழைய இடத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென்றும் அப்பகுதியை சேர்ந்த ஆர்பி சிவம்நகர் மற்றும் பாரி நகர் நலச்சங்கம் சார்பில் அதன் செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் தலைமையில் ஏரளமான பெண்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆணையர் (பொ ) இளங்கோவனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில், எங்கள் பகுதிக்கு பைபாஸ் சாலை மற்றும் வஉசி சாலைகளில் உள்ள போர்வெல்களின் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீரை நகராட்சி நிர் வாகம் எந்தவித காரணமின்றி நிறுத்தி விட்டு எங்கள் பகுதியில் 50 ஆண்டு காலமாக அமைந்துள்ள கழிவுநீர் தொட்டி, குப்பைகள் பிரித்து சுத்தம் செய்யும் இடம் மற்றும் நகரின் பல பகுதிகளில் இருந்து வரும் செப்டிங்க் டேங்க் கழிவுகள் கொட்டும் இடத்தின் அருகே உள்ள நகராட்சி புல் பண்ணை அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது.இந்த தண்ணீரை பருகினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலருக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே ஏற்கனவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட இடங்களில் இருந்து மட்டுமே எங்கள் பகுதிகள குடிநீர் வழங்க வேண்டும். இதில் நகராட்சி நிர்வாகம் செய்து தருவதில் காலதாமதம் ஏற்பட்டால் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் தங்களிடம் உள்ள குடிநீர் இணைப்பினை நகராட்சிக்கே ஒப்படைத்து விடுவதை தவிர வேறு வழியில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு