ஒரத்துப்பாளையம் அணை நிரம்பியது

சென்னிமலை, ஆக. 11: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக கனமழை பெய்துவருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரத்துப்பாளையம் அணை நிரம்பியது.

  கடந்த சில நாளாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் இருந்து நொய்யல் ஆறு உற்பத்தியாகி கோவை,  திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக சென்று கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த ஒரத்துப்பாளையம் அணை இரண்டே நாளில் நிரம்பியது. இதனால் அனையின் ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு நீர் முழுமையாக வெளியற்றப்படுகிறது. இதனால் நொய்யலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ஒரத்துப்பாளையம் அணையில் 16 அடிக்கு தண்ணீர் தேங்கியது.

 கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரத்துப்பாளையம் அணைக்கு வரும்  நீரின் அளவு அதிகரித்தது.நேற்று முன்தினம் இரவு நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 3700 கன அடி தண்ணீர் ஒரத்துப்பாளையம் அணைக்கு வந்தது. நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து 1200 கன அடியாக இருந்தது. இதனால் ஆற்றில் வருகிற தண்ணீர் முழுவதும் அணையில் தேக்காமல் வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது.  சாயக்கழிவு தண்ணீரால் ஆறு மற்றும் அணையின் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகள் மற்றும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் மாசுபட்டு வீணாய்போய்விட்டது என்கின்றனர் விவசாயிகள். தற்போது மழை பெய்து மழை நீர் சென்றாலும் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது அணைக்கு வரும் நீரில் உப்பு தன்மை டி.டி.எஸ்., 1500 ஆக குறைந்துள்ளது.  மேலும் நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பெருந்துறை தாசில்தார் துரைசாமி அணை மற்றும் ஆற்று பகுதிகளை பார்வையிட்டார் மேலும் தரைபாலம் உள்ள பகுதிகளில் போக்குவரத்தினை தடை செய்யவும் வருவாய் துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: