குடிமங்கலம் அருகே பாலம் பணி பஸ் போக்குவரத்து துண்டிப்பு

உடுமலை, ஆக.11:குடிமங்கலம் ஒன்றியம்  வீதம்பட்டி பகுதியில்  ஓடையின் குறுக்கே  உயர்மட்டப்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது உடுமலை திருப்பூர்  ரோடு சந்திப்பு பெரியபட்டி பகுதியிலிருந்து நெகமம் செல்லும் முக்கிய  இணைப்பு சாலையில் கடந்த சில மாதங்களாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று  வருகிறது. இந்த பணிகளின் போது முறையாக மாற்றுப்பாதை அமைக்கவில்லை என்று  கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை  பெய்து வருகிறது. இதனால், மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சேறும்  சகதியுமாக மாறி விட்டது. பாலம் கட்டுமானப்பணிகளுக்காக   தூண்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனவே இரு தூண்களுக்கு இடையிலான பாதையையே  வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குறுகலான பாதையில் இரு சக்கர  வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மட்டுமே சென்றுவர  முடிகிறது. பஸ்,லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால் இந்த  பகுதி வழியாக செல்லும் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்  சந்திராபுரம், வாகத்தொழுவு, கொசவம்பாளையம், அரசூர் உள்ளிட்ட கிராம மக்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நெகமம் பகுதிக்கு செல்லும் மக்களும்  செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில்  பஸ் போக்குவரத்தையே பயன்படுத்தி வரும் நிலையில் பள்ளி கல்லூரிக்கு பஸ்களில்  செல்லும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கனரக  வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் இடுபொருட்கள்  மற்றும் விளை பொருட்களைக்கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.மேலும்  தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களைக்கொண்டு செல்ல முடியாத நிலையும்  உள்ளது. எனவே கனரக வாகனங்கள் செல்லும் வகையில் மாற்றுப்பாதையை சீரமைக்கவும்  பாலம் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: