போயம்பாளையம் வெங்காய மண்டியில் ரூ.1.75 லட்சம் திருடிய சிறுவர்கள் 2 பேர் கைது

திருப்பூர், ஆக. 11:ஈரோடு சீதகாதி வீதியை சேர்ந்தவர் முகமது ரியாஷ் (36). இவர் திருப்பூர் போயம்பாளையம் நால் ரோடு சந்திப்பு அருகே வெங்காய மண்டி வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.  கடந்த மாதம் 25ம் தேதி இரவு வழக்கம் போல முகமது ரியாஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் மறுநாள் காலை கடையை திறக்க சென்ற போது கடையின் பின்புறம் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த மேஜையும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து முகமது ரியாஷ் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அனுப்பர்பாளையம் போலீசார் போயம்பாளையம் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த 2 சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த 2 பேரும் பெருமாநல்லூர், போயம்பாளையம் பகுதிகளை சேர்ந்த 13 மற்றும் 16 வயது சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் முகமது ரியாஷ் வெங்காய மண்டியில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் பணத்தை திருடியதை 2 பேரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சிறுவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: