அமராவதி அணை நீர்மட்டம் 71 அடியாக உயர்வு

உடுமலை,  ஆக. 11:அமராவதி அணை நீர்மட்டம் நேற்று 71 அடியாக உயர்ந்தது. இதையடுத்து,  இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.உடுமலை  அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் திருப்பூர்,  கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.  நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் சப்ளையும் செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையே அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.இந்நிலையில்,  தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி, தற்போது அதிகளவில் பெய்துவருகிறது.  இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து  வருகிறது.

கடந்த 7ம்தேதி அணை நீர்மட்டம் 43.70 அடியாகவும், நீர்வரத்து  1100 கனஅடியாகவும் இருந்தது. 8ம்தேதி நீர்மட்டம் 48 அடியாகவும்,  நீர்வரத்து 2272 கனஅடியாகவும் இருந்தது. 9ம் தேதி நீர்மட்டம் 64  அடியாகவும், நீர்வரத்து 10,395 கனஅடியாகவும் இருந்தது. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 71 அடியை எட்டியது. நீர்வரத்து 5100  கனஅடியாக இருந்தது. 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர்  திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து,  பொதுப்பணித்துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்தனர். எனவே, அரசு  உத்தரவிடும்பட்சத்தில் இன்று (11ம்தேதி) அணையில் இருந்து தண்ணீர்  திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே, விவசாயிகள் நாற்றங்கால் நட்டு தயார் நிலையில் உள்ளனர். தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: