விடுகளில் மழைநீர் புகுவதை தடுக்க கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

பொள்ளாச்சி, ஆக. 11:  பொள்ளாச்சி நகரில், குடியிருப்புகளில் மழைநீர் புகுவதை தடுக்க, பிரதான சாக்கடை கால்வாய்  தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.   பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேரும் கழிவுநீர், ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள கிருஷ்ணாகுளத்தில் கலக்கிறது. நகர எல்லையில் ஒரு பகுதியான பொட்டுமேட்டில் இருந்து ஆரம்பிக்கும் கழிவுநீர் சாக்கடை மரப்பேட்டைவீதி, நேருநகர், கண்ணப்பன்நகர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி பாலத்தை கடந்து கிருஷ்ணாகுளத்தை சென்றடைகிறது.   நகர் பகுதியிலிருந்து கழிவுநீர் செல்ல வசதியாக பெரிய அளவில் உள்ள இந்த சாக்கடை பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமலும், ஆழப்படுத்தாமல் இருப்பதால், அதில் நாளுக்குநாள் கழிவு பொருட்கள் தேங்கி துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாக்கடையில் ஆங்காகே தூர்வாரும் பணி நடைபெற்றிருந்தாலும், அப்பணி நாள்போக்கில் கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆழம் குறைவான பிரதான சாக்கடையில் மழைநீர் காட்டாற்ற வெள்ளம்போல் வரும்போது, அவை வீடுகளில் புக வாய்ப்புள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் சாக்கடை கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள்  கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று, மரப்பேட்டை வழியாக செல்லும் சாக்கடை கால்வாயில் பொக்லைன் கொண்டு ஆழப்படுத்தும் பணி துவங்கப்பட்டது. இதனை, நகராட்சி ஆணையாளர் கண்ணன் துவக்கி வைத்தார். இதையடுத்து மரப்பேட்டை, நேருநகர், பெரியார்காலனி, செரிப் காலனி, கண்ணப்பன்நகர் உள்ளிட்ட பகுதி வழியாக செல்லும் சாக்கடை கால்வாயின் ஓரம் உள்ள புதர்களை அப்புறப்படுத்துவதுடன், தூர்வாரி ஆழப்படுத்தும் பணி இன்னும் சில நாட்களில் முழுமையாக நிறைவடையும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: