கன மழைக்கு நகரில் பல்வேறு இடங்களில் வீடு இடிந்து சேதம்

பொளளாச்சி, ஆக.11: பொள்ள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், கடந்த 5 நாட்களுக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மட்டுமின்றி, சமவெளிப்பகுதியான கிராம பகுதிகளில் இடைவிடாமல் இரவு மற்றும் பகல் நேரத்திலும், கன மழை பெய்தது.  தொடர்ந்து பெய்த மழையால், கிராமபுறங்களில் உள்ள தோப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், மழை பெய்யும்போது ரோட்டில் காட்டாற்று வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும், பல கிராமங்களில் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தார்ரோட்டில் உள்ள ஜல்லிபெயர்ந்து குண்டும் குழியுமானது.   இடைவிடாமல் தொடர்ந்து பெய்த மழையால், சூளேஸ்வரன்பட்டி கக்கன்வீதியை சேர்ந்த சந்திராள், கருப்புசாமி, ஆனந்தன், அம்பேத்கர் வீதியை சேர்ந்த திருமாத்தாள் ஆகியோரது வீடு இடிந்து சேதமானது. மேலும், சேத்துமடை, ஆனைமலை, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் குடிசை வீடுகள் சேதமாகியுள்ளது. நேற்று பெய்த கன மழையால் வால்பாறைரோடு, ஆனைமலை ரோட்டோரம் நின்ற சில மரங்களில் இருந்து கிளைகள் முறிந்து விழுந்துள்ளது. இதில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வீடு சேதம் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

Related Stories: