கான்டூர் கால்வாயில் மண் அகற்றும் பணி தீவிரம்

பொள்ளாச்சி, ஆக. 11: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் இரவு என தொடர்ந்து பெய்த கனமழையால் வனப்பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 8ம் தேதி இரவு சர்க்கார்பதி மலையில் திடீர் என நிலச்சரிவு ஏற்பட்டு அதிலிருந்து மண் மற்றும் கற்கள், மரகட்டைகள் உள்ளிட்டவை, சர்க்கார் பதியிலிருந்து துவங்கி திருமூர்த்தி அணைக்கு செல்லும் கான்டூர் கால்வாயில் விழுந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு மூடியது. இதனால் கான்டூர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் செல்ல முடியாமல், வெளியேறி மின்வாரியத்தை தொட்டிருந்த நாகரூத்து எனும் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சூழ்ந்து கொண்டு அடித்து சென்றது. ரேஷன்கார்டு, ஆதார்கார்டு மற்றும் தங்கள் உடமைகளை மலைவாழ் மக்கள் பறிகொடுத்ததனர். மேலும், குஞ்சப்பன் என்பவரின் ஒன்றரை வயது மகள் சுந்தரியை தண்ணீர் அடித்து சென்று மாயமான சம்பவம் அனைவரையும் வேதனையடைய செய்தது.  தற்போது மலைவாழ் மக்கள் அனைவரும், அப்பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

 இதற்கிடையே, நிலச்சரிவு ஏற்பட்டு கான்டூர் கால்வாயில் விழுந்து முடிய மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, இரண்டு பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மண்ணை முழுமையாக அப்புறப்படுத்த இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.  இதற்கிடையே, சர்க்கார்பதியில் நிலச்சரிவு ஏற்பட்டு காற்றாற்று வெள்ளத்தில் குடிசைகள் அடித்து செல்லப்பட்ட நாகரூத்து பகுதியை நேற்று, திமுக எம்பி.,சண்முகசுந்தரம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஆனைமலை ஒன்றிய செயலாளர் வக்கீல் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் இருந்தனர்.  சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட எம்பி.,சண்முக சுந்தரம், மின்வாரிய குடியிருப்பில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்ட மலைவாழ் மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும், ஆதார்கார்டு மற்றும் ரேஷன்கார்டு கிடைப்பதற்கான நடவடிக்கையும். வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டித்தரவும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவதாக மலைவாழ் மக்களிடம் தெரிவித்தார்.

Related Stories: