தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் குறித்து கணக்கெடுப்பு பணி

ஈரோடு,  ஆக. 11:  ஈரோடு மாவட்டத்தில் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில்  தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் குறித்து கணக்கெடுப்பு பணி  துவங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   நாட்டில்  வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா  (ஏ.ஏ.ஒய்.) திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படு  ருகின்றது. இந்த ஏஏஒய் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் அரசின் அனைத்து  நலத்திட்டங்கள் பெறவும் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். ஈரோடு மாவட்டத்தில்  மொத்தமுள்ள 7 லட்சத்து 8 ஆயிரத்து 557 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில்  அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் மட்டும் 68 ஆயிரம் உள்ளது.  இந்த கார்டு  வைத்துள்ளவர்களில் பலர் வறுமைகோட்டினை தாண்டி சொந்த வீடு, கார், விவசாய  நிலம் உள்ளிட்டவைகளுடன் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசின் எவ்வித  சலுகையும் பெற தகுதி இல்லாதவர்கள் கூட ஏ.ஏ.ஒய்., ரேஷன் கார்டு  வைத்துக்கொண்டு பயனடைந்து வருவதாகவும், அதே வேளையில் உண்மையான பயனாளிகள்  விடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு  நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

  இதுகுறித்து வழங்கல்துறை அதிகாரிகள்  கூறியதாவது: ஏ.ஏ.ஒய்., கார்டு வைத்துள்ளவர்களில் சிலர் தகுதி இல்லாமல்  உள்ளதாக வந்துள்ள தகவலையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏ.ஏ.ஒய்., கார்டு  வைத்துள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவாய் ஆய்வாளர், அந்தந்த  வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு செய்து முழு விசாரணை  செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 68  ஆயிரம் ரேஷன் கார்டுகள் ஏஏஒய் கார்டுகளாக உள்ளன. இந்த வகை கார்டுகளுக்கு  மாதந்தோறும் 35 கிலோ ரேஷன் அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த  அரிசியைத்தான் அவர்கள் பயன்படுத்துகிறார்களா அல்லது வெளியில் விற்பனை  செய்கிறார்களா என்பது குறித்தும் கணக்கெடுக்கபட்டு வருகின்றது. இவ்வாறு  கூறினர்.

Related Stories: