கேரளாவில் கனமழை காரணமாக ஈரோடு மண்டியில் வெல்லம் தேக்கம்

ஈரோடு, ஆக. 11:  ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் கரும்புகளை ஆலை உரிமையாளர்களுக்கு டன் கணக்கில் கொள்முதல் செய்து, அதனை பாவாக்கி அச்சு மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கின்றனர். ஈரோடு, முள்ளாம்பரப்பு, கோபி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை ஆகிய பகுதியில் கரும்பாலைகள் அதிகளவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு, உருண்டை வெல்லம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து செல்வது வழக்கம். இதில் ஆலை உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் அச்சு-உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரைகளை 30 கிலோ மூட்டைகளாக ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மண்டிக்கு சனிக்கிழமை தோறும் ஏலம் மூலம் விற்பனை செய்வர்.   இந்த மண்டிக்கு வரத்தாகும் அச்சுவெல்லத்தை 90சதவீதம் கேரளா மாநில வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருவதால், கடந்த 2 வாரமாக அந்த மாநில வியாபாரிகள் வருகை முற்றிலும் குறைந்தது. இதனால் அச்சுவெல்லம் மூட்டைகள் பல ஆயிரக்கணக்கில் தேங்கியிருப்பதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

Advertising
Advertising

  இதுகுறித்து சித்தோடு வெல்ல மண்டி நிர்வாகிகள் கூறியதாவது: கேரளாவில் கனமழை மற்றும் தமிழகத்தில் பெய்யும் பரவலான மழை காரணமாக வெல்ல உற்பத்தியை உற்பத்தியாளர்கள் குறைத்துள்ளனர். மேலும், மழையின் காரணமாக கேரளா வியாபாரிகள் வெல்ல மண்டிக்கு வருவது குறைந்ததால், வரத்தான அச்சுவெல்லம் அப்படியே தேங்கி உள்ளன. இதில் இன்று (நேற்று) நடந்த ஏலத்திற்கு, நாட்டுச்சர்க்கரை 1500 மூட்டைகள், உருண்டை வெல்லம் 5ஆயிரம் மூட்டைகள், அச்சு வெல்லம் 1500 மூட்டைகள் வரத்தானது. இதில் நாட்டுச்சர்க்கரை மூட்டை (30கிலோ) ரூ.900 முதல் ரூ.1,150 வரையும், உருண்டை வெல்லம் மூட்டை ரூ.850 முதல் ரூ.1,180 வரையும், அச்சு வெல்லம் ரூ.900 முதல் ரூ.1,170 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: