புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே மெட்ரோ ரயில் இரும்பு தடுப்பு மீது மாநகர பஸ் மோதி நொறுங்கியது

சென்னை, ஆக. 11: புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே மெட்ரோ ரயில் இரும்பு தடுப்பு  மீது மாநகர பஸ் மோதி நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஐஸ்அவுசில் இருந்து மாநகர பஸ் (த.எ.32ஏ) நேற்று காலை 9 மணிக்கு புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி  பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டது. பஸ்சில், 10 பயணிகள் சென்று கொண்டிருந்தனர். சுங்கச்சாவடி நிறுத்தம் அருகே சென்றோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கு மெட்ரோ ரயில் பணிக்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு மீது பயங்கரமாக மோதியது. இதில், பஸ்சின் முன்பக்க ஹெட்லைட் மற்றும் கண்ணாடி நொறுங்கியது. இதை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து எம்டிசி   நிர்வாகத்திடம் டிரைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பஸ் டிரைவருக்கும், மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். பின்னர், இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரிடமும், விபத்து நடந்த பகுதியில் பணிபுரியும் மெட்ரோ ரயில் ஊழியர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: