தாண்டிக்குடியில் அவக்கோடா பழ சாகுபடி கருத்தரங்கம்

பட்டிவீரன்பட்டி, ஆக. 11: தாண்டிக்குடியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு மலைவாழை விவசாயிகள் இணைந்து கருத்தரங்கை நடத்தியது. கோவை வேளாண்மை பல்கலை துணைவேந்தர் குமார் தலைமை வகித்து பேசுகையில், ‘பெரும்பாறை, தாண்டிக்குடி மற்றும் கீழ்பழநி மலை பகுதிகளில் காப்பி செடிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்த காப்பி தோட்டங்களில் வெண்ணெய் பழ மரங்களை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் பழமையான இம்மரங்கள் நோய் தாக்குதலின் காரணமாக வாடி வருவதாக எங்களின் கவனத்திற்கு வந்தது. நாங்கள் விஞ்ஞானிகள் குழுவை அனுப்பி ஆய்வு செய்து இதற்கான காரணத்தை கண்டுபிடித்து தீர்வு ஏற்படுத்தியுள்ளோம். இதுபோல் வாடி வரும் வெண்ணெய் பழங்களை காப்பாற்ற விவசாயிகள் குழுவாக சேர்ந்து கருத்தரங்கம் நடத்தினால் அங்கு நேரடியாக வந்து நாங்கள் பழங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்பகுதி விவசாயிகள் நிட்சி, ரம்புட்டான் போன்ற பழ வகைகளை நட்டால் அதிகளவில் லாபம் பெறலாம். ஒரு காரியத்தை முயற்சி எடுத்து சிறப்பாக அதனை முழு ஈடுபாட்டுடன் செய்தால் வெற்றி நம் வசமாகும்’ என்றார்.தொடர்ந்து இப்பகுதியில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் வெண்ணெய் பழ சாகுபடி குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. முன்னதாக கருத்தரங்கில் மலைவாழை சங்க தலைவர் சேகர், பல்கலை மேலாண்மை குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மலைவாழை சங்க செயலாளர் வீரஅரசு வரவேற்றார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: