ஆம்பூர் அருகே கிராமத்தை சேர்ந்தவர் வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் நிறைமாத கர்ப்பிணி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு

வேலூர், ஆக.11:வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறைமாத கர்ப்பிணி மனைவி கண்ணீர் மல்க மனு அளித்தார்.வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியான முத்துலட்சுமி தனது உறவினர்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரியிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:எனது கணவர் சுந்தருக்கும், எனக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி திருமணம் நடந்தது. கணவர் கார் மெக்கானிக்காக சவுதி அரேபியாவில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கடந்த 9ம் தேதி மாலை எனது கணவருடன் பணிபுரியும் ஒருவர், என்னை தொடர்பு கொண்டு எனது கணவர் இறந்துவிட்டதாக கூறினார்.

Advertising
Advertising

எனது திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து வந்து மீண்டும் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி சவுதி அரேபியாவுக்கு சென்றார். அப்ேபாது அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். மேலும் கடந்த 8ம் தேதி இரவும், 9ம தேதி காலை போனில் வீடியோ கால் மூலமும் என்னிடம் பேசினார்.அப்போது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தார். உடல் நிலை சரியில்லாத மாதிரியோ வேறு எவ்வித தயக்கமோ இன்றி என்னுடன் பேசினார். ஆனால் திடீரென அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளேன். இந்த மரண செய்தி மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.அவர் பணியின்போது இறந்துள்ளதால், அவரின் உடலை இந்தியா கொண்டு வர வேண்டும். மேலும் பணி அமர்த்திய நிறுவனமும் மத்திய, மாநில அரசுகளும் நிதியுதவிகளை வழங்க வேண்டும். காலதாமதமின்றி எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Related Stories: