வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை மனைவி கண்ணெதிரே கோர சம்பவம்

வேலூர், ஆக.11:திருமணமான ஒரு மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கண்ணெதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

Advertising
Advertising

அப்போது வாலிபருடன் வந்த இளம்பெண் அலறி துடித்தபடி பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார். அப்போது அந்த பெண்ணை, மேம்பாலத்தின் மீது இருந்தவர்கள் தடுத்துநிறுத்தினர். இதற்கிடையில் அந்த இளம்பெண் மயக்கமானார்.தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீசார், இளம்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் வாலிபர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் வேலூர் அடுத்த கணியம்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்(32) என்பதும், அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட மகேஷின் மனைவி புவனேஸ்வரி(27) கணியம்பாடி பிடிஓ அலுவலகத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பிரிவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இவர்களுக்கு கடந்த மாதம் 11ம் தேதிதான் திருமணமாகியிருப்பதும் தெரியவந்தது.இதுகுறித்து மகேஷ் மனைவி புவனேஷ்வரியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது, ‘திருமணத்துக்கு முன்பே மகேஷுக்கு வேறு பெண்களிடம் கள்ளத்தொடர்பு இந்துள்ளது. இதுதொடர்பாக திருமணமான சில நாட்களிலேயே எங்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்று ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அழைத்து சென்றார். அங்கு சென்றதும் நான் அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து வந்தேன். தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்தபோது, பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தை திருப்பினார்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதற்கிடையில் என்னை கீழே தள்ளிவிட்டு அவரும் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.ஆனால், நான் மேம்பாலத்தின் தடுப்பு சுவரை இறுக்கமாக பிடித்து கொண்டேன். இதனால், அவர் மட்டும் குதித்துவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியில் நானும் அங்கிருந்து குதிக்க முயன்றேன். அதற்குள் அவ்வழியாக சென்றவர்கள் என்னை பிடித்து தடுத்துவிட்டனர்’ என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட மகேஷ், அவரது மனைவி புவனேஷ்வரி ஆகியோரது செல்போன் எண்களை ஆய்வு செய்து வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: