‘குண்டு ஒண்ணு வச்சு இருக்கேன்’ என பேஸ்புக்கில் பதிவு ஆம்பூரில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் மோப்ப நாயுடன் தீவிர சோதனை மர்ம ஆசாமியால் பரபரப்பு

ஆம்பூர், ஆக.11: வெடிகுண்டு வைத்திருப்பதாக பேஸ்புக்கில் மர்ம ஆசாமி பதிவிட்டதை தொடர்ந்து ஆம்பூர் நகரின் பல இடங்களில் மோப்பநாயுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் வரும் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாட உள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், எனவே பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படியும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, வேலூர் மாவட்ட போலீசாரும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘குண்டு ஒண்ணு வச்சு இருக்கேன்... ஆம்பூர்க்கு வெடிகுண்டு ஒண்ணு வச்சு இருக்கேன்’ என பதிவிட்டுள்ளார். இதையறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் அந்த பேஸ்புக் பக்கத்திற்கு சென்று அதில் பதிவிட்டிருந்த நபர் குறித்து விவரம் தேடினர். அதில் போதிய விவரம் இல்லாததால் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே சைபர் கிரைம் போலீசார், அந்த மர்ம நபர் யார்? அவருடன் நட்பு தொடர்பில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போதும் அந்த நபர் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் அந்த நபர் தொடர்ந்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவதும் தெரியவந்தது. இருப்பினும் தற்போது போலீசார் அந்த நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தகவல் ேபஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று காலை ஆம்பூருக்கு வந்தனர். அவர்கள் எஸ்ஐ நாகராஜன் தலைமையில் 7 பேர் மோப்பநாய் அக்னியுடன், மக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர்.குறிப்பாக ஆம்பூர் பஸ், ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால், எங்கும் வெடிகுண்டு சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மர்ம ஆசாமி குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: