ஆம்பூர் அருகே பரபரப்பு பெட்ரோல் பங்க்கில் திடீர் தீ வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்

ஆம்பூர், ஆக. 11: ஆம்பூர் அருகே பெட்ரோல் பங்க்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அங்கு பெட்ரோல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரத்தில் வேலூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. நேற்று மதியம் அந்த பங்க்கில் உள்ள ஒரு பம்பில் ஏற்பட்ட கோளாறை ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அந்தப் பம்பில் இருந்து தீ பிடித்தது.

மளமளவென தீ பரவியதை கண்ட அந்த பங்க்கில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அங்கு வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.உடனே அங்கிருந்த ஊழியர்கள் சிலர் மண் நிரப்பிய வாளி மற்றும் தீயணைப்பான் கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்தனர். கரும்புகை மூட்டத்துடன் தீ பரவியதை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு குவிந்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரத்தில் இயங்கிவரும் பெட்ரோல் பங்க்கில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டு கரும் புகை வெளியேறியது.

Tags :
× RELATED சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வந்த அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு