×

ஆரணி பகுதிகளில் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆரணி, ஆக.11: ஆரணி பகுதிகளில் மணல் கொள்ளை நடைபெறுவது குறித்து புகார் அளித்தும் வருவாய்த்துறையினர், போலீசார் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்று படுகைகளில் இரவு, பகலாக மணல் கொள்ளை நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு மணல் கடத்தலின்போது, மணல் சரிந்து சிறுவன் உட்பட 3க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க எஸ்பி சிபிசக்கரவர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார், மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து குண்டர் சட்டத்தில் கைது செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வந்தனர். இதனால் கடந்த 2 மாதங்களாக ஆரணி பகுதிகளில் மணல் கொள்ளை குறைந்திருந்தது.
தற்போது மீண்டும் மணல் மாபியாக்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகலாக டிராக்டர், லாரி, மினிவேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, ஆரணி அடுத்த விண்ணமங்கலம், மேல் சீசமங்கலம், ஆகாரம், முள்ளண்டிரம், முனுகப்பட்டு பகுதிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.அதேபோல், ஆரணி டவுன் கமண்டல நாகநதி, விஏகே நகர், ரகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் நூதனமுறையில் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் கடத்தியபோது, மணல் சரிந்து 3க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர். இதனால் சில மாதங்களாக மணல் திருட்டு குறைந்திருந்தது. தற்போது, மணல் கொள்ளையர்கள் மீண்டும் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆரணி கமண்டல நாகநதியில் பகல் நேரங்களில் மணல் சலித்து, மூட்டைகளில் சேகரித்து வைத்து, இரவு நேரங்களில் மினிவேன் மற்றும் பைக்குகளில் எடுத்து செல்கின்றனர். இவற்றை ஆரணி டவுனில் உள்ள மறைவான பகுதிகளில் சேகரித்து வைக்கின்றனர். பின்னர், அங்கிருந்து லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...