எட்டயபுரத்தில் செயல்படாத அடிபம்பு பொதுமக்கள் நூதன போராட்டம்

எட்டயபுரம், ஆக. 11: எட்டயபுரத்தில் செயல்படாத நிலையில் உள்ள அடிபம்புக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தினர். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  எட்டயபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எட்டயபுரம்- நடுவிற்பட்டி சாலை புதுப்பிக்கும் பணிக்காக சாலையோரம் இருந்த அடிபம்பு அகற்றப்பட்டது. சாலை பணி முடிவடைந்ததும் மீண்டும் அமைக்கப்பட்டபோதும் தண்ணீர் மேலே வருவதற்கான முக்கியமான குழாய் சரியாக பொருத்தப்படவில்லை. இதனால் அந்த அடிபம்பில் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் பல முறை முறையிட்டும் பலனில்லை.  இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் செயல்படாத அடிபம்புக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தினர். மேலும் சீவலப்பேரி குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததோடு மாற்று ஏற்பாடும் செய்யப்படாததை கண்டித்து காலி குடங்களுடன் எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். 11வது வார்டு மார்க்சிஸ்ட் பொறுப்பாளர் மாரிமுத்து தலைமையில் நடந்த போராட்டங்களில் எட்டயபுரம் தாலுகா செயலாளர் வேலுச்சாமி, மாநில குழு உறுப்பினர் மல்லிகா, தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், சண்முகராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: