தருவைகுளத்தில் சமூக மேம்பாட்டு திட்ட முகாம் தன்னம்பிக்கையை பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் கனிமொழி எம்பி பேச்சு

ஓட்டப்பிடாரம், ஆக. 11:  தன்னம்பிக்கையை பெண்கள் அதிக அளவில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என தருவைக்குளத்தில் தூய மரியன்னை கல்லூரி சார்பில்  நடந்த சமூக மேம்பாட்டுத் திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. பேசினார்.    தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி  சார்பில் சமூக மேம்பாட்டு திட்ட பயிற்சி முகாம் நடந்தது. தருவைகுளம் புனித கத்தரீன் பெண்கள் துவக்கப்பள்ளியில் நடந்த இம்முகாமிற்கு கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை வகித்தார். தூய மரியன்னை கல்லூரி குழந்தை தெரஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகையில், ‘‘ சமூக சூழல் மாற்றத்தால் தற்போது நாம் அனைவரும் மிக எளிதாக கல்வி பயிலும் நிலை உள்ளது. பெண்கள் கல்வியறிவு பெற  தந்தை பெரியாரும், திராவிட இயக்கத்தினரும் போராடி உரிமை பெற்றுத்தந்தனர். பெண்கள் வேலைக்கு செல்வதும் அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையும் இதனால் உருவாகியுள்ளது. பெண்களால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வானில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 பணியில் இருந்தவர்களில் இருவர் பெண்கள் என்பதே சான்றாகும். எனவே பெண்கள் தன்னம்பிக்கையை அதிக அளவில் வளர்த்து கொள்ள வேண்டும்’’ என்றார்.   இதைத்தொடர்ந்து, கனிமொழி எம்.பி. அங்கு மகளிர் மற்றும் மாணவர்களுக்கான நடத்தப்படும் பயிற்சியில், சணல் கைவினை பொருட்கள் தயாரித்தல், தையல் பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி, மாடி தோட்டம் ஆகியவற்றை துவக்கிவைத்து பார்வையிட்டார்.

 இதில் சண்முகையா எம்.எல்.ஏ., தி.மு.க. மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் உமரிசங்கர், முன்னாள் பஞ். தலைவர் மகாராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கனிமொழியை சந்தித்த மாணவர்கள், பள்ளிக்கு புதிய கலையரங்கம் கட்டித்தருமாறு மனு அளித்தனர். இதேபோல் அப்பகுதி மக்களும் பல்வேறு மனுக்கள் அளித்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி., நியாயமான கோரிக்கைகள் நிச்சயம்  நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார்.

Related Stories: