தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.6.25 லட்சம் சமாதான கூட்டத்தில் முடிவு

ஸ்பிக்நகர், ஆக. 11: தூத்துக்குடி அருகே தனியார் ஆலை குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.6.25 லட்சம் நிவாரணம் வழங்குவது என இங்கு நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  தூத்துக்குடி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் முத்தையாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அந்தோணி (55), பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி (23) ஆகிய இருவரும் கட்டுமானப் பணியின் போது ஆலையில் உள்ள குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனால் ஆவேசமடைந்த சக தொழிலாளர்கள், உயிரிழப்பிற்கு காரணமான சேப்டி மேனேஜர் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்யவும், பணியின்போது மரணமடைந்த தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள், திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று முன்தினம் ஸ்பிக் ஆலை முன்பு நள்ளிரவு 12 மணி வரை மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த ஏஎஸ்பி பிரகாஷ் சமரசப்படுத்த முயன்றார். இதைத் தொடர்ந்து  நேற்று காலை முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஏஎஸ்பி பிரகாஷ், இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், எஸ்ஐ ராஜபிரபு, தொழிற்சாலையின் மேலாளர் தியாகராஜன், அதிகாரிகள் அமித்ஷா, மோகன் மற்றும் திமுக, சிஐடியு, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற சமாதான கூட்டம் நடந்தது. இதில் பணியின் போது உயிரிழந்த அந்தோணி, பிச்சாண்டி குடும்பங்களுக்கு தலா ரூ.6.25 லட்சம் நிவாரணம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: