பணகுடி குத்ரபாஞ்சான் அருவியில் குளிக்க தடை பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அதிரடி

பணகுடி, ஆக.11: பணகுடி அருகேயுள்ள மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குத்ரபாஞ்சான் அருவியில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பணகுடி சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குத்ரபாஞ்சான் அருவிக்கு செல்ல முயன்று வருகின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு செல்ல முயன்ற உள்ளூர், சுற்றுலா பயணிகளுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதங்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், குத்ரபாஞ்சான் அருவி பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் மலைப்பகுதியை ஒட்டிய தோட்டங்களில் புகுந்து கால்நடைகளை கடித்து கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில்  உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் குத்ரபாஞ்சான் அருவியில் குளிக்க ஏதுவான இடங்களின்றி பாறைகள் செங்குத்தாக உள்ளது. பெரும்பாலும் மதுபிரியர்களே அதிகளவில் வருகின்றனர். அவர்கள் பாட்டில்களை பாறைகளில் உடைத்து செல்வதால் விலங்குகள், வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் செல்லும்போது கால்களில் குத்தி காயங்கள் ஏற்படுவதுடன், அசம்பாவித சம்பவங்களும் நடக்கிறது. அருவிக்கு இளைஞர்கள் தடையை மீறி செல்வது வாடிக்கையாகி உள்ளது. இப்பகுதியில் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்  நடமாட்டம் உள்ளதால் விபரீதங்கள் ஏற்படுவதை தடுக்க அறிவுறுத்தியும் கேட்பதில்லை.குற்றாலத்தில் மழை நின்றாலும் அருவிகளில் அதிகமான நாட்கள் தண்ணீர் வரும். ஆனால் குத்ரபாஞ்சானில் மழை பெய்த இரண்டு நாட்களுக்கு மட்டும் தண்ணீர் வரும். பிறகு வறட்சியாகதான் காணப்படும். ஆனால் ரோஸ்மியாபுரம் கன்னிமார்தோப்பு பகுதியில் உள்ள தடுப்பணையில் 10 நாட்களுக்கு அதிகமாக தண்ணீர் வரும். அங்கு வனவிலங்குகள் வந்தாலும் தப்பி ஓட வழிகள் உள்ளது. பெண்களுக்கும் பாதுகாப்பான இடமாகவும் உள்ளது என்றனர்.

Related Stories: