தொடர் சாரல் மழையால் திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பியது

களக்காடு,ஆக.11:  திருக்குறுங்குடி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையினால் பெரியகுளம் நிரம்பியது. மடைகள் பழுதடைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெரியகுளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளத்திற்கு திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் இந்த குளம் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. கடந்த ஜூன் மாதம் பெய்த மழையினால் வறண்டு கிடந்த குளத்திற்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

 இதற்கிடையே கடந்த சில நாட்களாக திருக்குறுங்குடி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் பலத்த மழை கொட்டியது. இதையடுத்து குளத்திற்கு கால்வாய் மூலம் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் நேற்று குளம் நிரம்பியது. பெரியகுளம் நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதை அந்த வழியாக செல்வோர் நின்று ரசித்து செல்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இந்த குளத்தின் நடுமடை பழுதடைந்து நீர்கசிவு ஏற்பட்டு கரைகள் சரிந்தன. ஆனால் அதன் பின் மடை சீரமைக்கப்படவில்லை. இதுபோல குளத்தின் மற்ற மடைகளும் பழுதடைந்து காணப்படுவதால் குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியுமா? என்பது கேள்வி குறிதான் என்றும் தண்ணீர் பழுதடைந்த மடைகள் வழியாக விரைவில் வெளியேறி விடும் என்றும் விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories: