கோட்டுச்சேரி தபால் நிலையத்தில் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்குவதில் பணமோசடி

காரைக்கால், ஆக. 11:   தபால் நிலையத்தில் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்குவதில், பணமோசடி செய்த ஊழியரை கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தபால் நிலையங்களில் ஜீரோ பேலன்ஸில் வங்கி கணக்கு தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இத்திட்டம் குறித்து கிராம மக்களிடையே அரசு அதிகாரிகள், தபால்நிலைய ஊழியர்கள் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், காரைக்கால் கோட்டுச்சேரி தபால் நிலையத்தைச் சேர்ந்த ஊழியர் மோகன் (36), காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் ஒவ்வொரு வீடாக சென்று, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நிவாரண தொகையை பெற வேண்டுமென்றால், தபால் நிலைய வங்கி கணக்கு முக்கியம் என கூறி, வங்கி கணக்குத் தொடங்க தலா ரூ. 100 வீதம் வசூலித்து, கணக்கை தொடங்கி கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

 வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை, காரைக்கால் கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்துக்கு சென்ற மோகனிடம் சிலர், ரூ.100 கொடுத்ததற்கான பில், பதிவு எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு சரியான பதிலை மோகன் கூறவில்லையென தெரிகிறது. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் மோகன் பல லட்சம் மோசடி செய்திருப்பதாக குற்றம் சுமத்தி, அவரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இத்தகவல் அறிந்த கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார், கீழகாசாக்குடி கிராமத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மோசடி செய்த பணத்தை மீட்டு தருவதாக போலீசார் கூறி மோகனை மீட்டு சென்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

Related Stories: