சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரி லால்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

லால்குடி, ஆக.8: லால்குடியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி பேசினர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் விசுவநாதன் தலைமை வகித்தார். இதில் தமிழகத்தில் சம்பா சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு கர்நாடக அரசிற்கு அழுத்தம் தரவேண்டும். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்க சாலை பணி நடைபெற்று வருகிறது. சாலை இரு புறங்களிலும், மழை நீர் வடிகால் வாய்க்கால் மற்றும் சிறு சிறு பாசன வாய்க்கால் பாலங்கள் பருவ மழை மற்றும் சம்பா சாகுபடி செய்யும் முன்பே விரைவாக அமைத்து தரவேண்டும், தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உடனடியாக பாக்கி தொகை வழங்க வேண்டும்.

Advertising
Advertising

லால்குடி தாலுகாவில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதித்த அளவைவிட கூடுதலாக மண் எடுத்து வருகின்றனர். இதனால் ஆயக்கட்டு நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது சிரமமாக இருக்கும். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரிகளை பார்வையிட்டு அதனை சமன்செய்து தரவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்தம்பி, அமைப்பளாளர் சுப்ரமணியன், ஒன்றிய தலைவர் ராமலிங்கம், மாநில துணை அமைப்பாளர்கள் பரமசிவம், ராஜேந்திரன் மற்றும் அரவிந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். இன்ஸ்பெக்டர்கள் லால்குடி முத்துக்குமார், சமயபுரம் மணிவண்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ முத்துக்குமார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் லால்குடி தாசில்தார் சத்தியபால கங்காதரனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

Related Stories: