திருவெறும்பூர், ஆக.8: திருவெறும்பூர் அருகே பொதுமக்கள் செல்லும் சாலையை தனி நபர் தனக்கு சொந்தமான இடம் என்று கூறி முள்ளை போட்டு ஆக்கிரமித்து அடைத்து வைத்ததால் பொதுமக்கள் வேங்கூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள வாரியார் நகர் திருச்சி மாநகராட்சியின் 64வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும். வாரியார் நகருக்கு செல்லும் சாலையின் தொடக்கம் கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்டதாகும். வாரியார் நகர் புதிதாக விஸ்தரிக்கப்பட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டுக்கு அடுத்த பகுதியான வாரியார் நகர் திருச்சி மாநகராட்சியுடன் சேர்கிறது. இந்நிலையில் வாரியார் நகருக்கு செல்லும் சாலை தனக்கு சொந்தமான இடம் என்று கூறி இளையராஜா அந்த சாலையில் யாரும் வராதபடி கற்கள், மணலை கொட்டி அதன் மீது கருவேல முட்களை போட்டு அடைத்து வைத்திருந்தார். இதனால் 200 பேர் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதையடுத்து இளையராஜாவின் இந்த செயலை கண்டித்து வாரியார் நகர் மக்கள் திருவெறும்பூர் வேங்கூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இளையராஜாவிடம் உரிய ஆவணத்தை கேட்டனர். ஆனால் இளையராஜா தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை போலீசார் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த இடப் பிரச்னை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் யாரும் எதுவும் செய்யக்கூடாது என்றும், அதுவரை எப்போதும் பயன்படுத்தியது போல் இந்த சாலையை பயன்படுத்துங்கள் என்று கூறி சாலையில் ஆக்கிரமித்து போடப்பட்ட முட்களை போலீசார் அகற்றினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருவெறும்பூர் தாசில்தாரை நேரில் சந்தித்து முறையிடப் போவதாக கூறி கலைந்து சென்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கூத்தைப்பார் பேரூராட்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் அந்தோணி ஆகியோர் பார்வையிட்டனர். பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் திருவெறும்பூர் வேங்கூர் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.