துறையூர், மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் முற்றுகை, சாலை மறியல்

துறையூர், ஆக.8: துறையூர் அருகே பகளவாடி ஊராட்சியில் உள்ள தவிட்டுபட்டி கிராம மக்கள் கடந்த 2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துறையூர் அருகே உள்ள பகளவாடி ஊராட்சியில் உள்ள தவிட்டுபட்டி கிராமத்தில் கடந்த 2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கடந்த 2 மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படாததால் பள்ளி செல்லும் குழந்தைகள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாமலும், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சிரமப்படுவதாகவும், ஒரு குடம் தண்ணீர் ரூ.5 விலை கொடுத்த வாங்குகிறோம் என கூறினர்.

Advertising
Advertising

இதனால் இப்பிரச்னை குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த தவிட்டுபட்டி கிராம மக்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டியில் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மணப்பாறை - கோவில்பட்டி சாலையில் உள்ள தொட்டியப்பட்டியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மருங்காபுரி ஒன்றிய ஆணையர் சீனிவாசபெருமாள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Related Stories: