×

உயர்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி,  ஆக. 8:  சென்டாக் இணையதளம் தொடர்ந்து முடக்கப்படுவதால் மருத்துவ படிப்பு  கனவில் இருக்கும் மாணவர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே  முன்னாள் எம்எல்ஏக்கள் மாணவர்களுடன் உயர்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.    புதுவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கால்நடை மற்றும்  ஆயுர்வேதம், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து பாடப்  பிரிவுகளுக்கும் சென்டாக் மூலம் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதற்கு  18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். நீட் மதிப்பெண்  அடிப்படையில் நடைபெறும் மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் முதல்கட்ட  கலந்தாய்வு கடந்த 27ம்தேதி நடந்தது. பின்னர் 282 இடங்கள் 2ம் கட்ட  கலந்தாய்வுக்கு காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இதில் பங்கேற்ற  விருப்பமுள்ளவர்களிடம் பதிவு, முன்பணம் கோரப்பட்டது.

  இதனிடையே நேற்று  முன்தினம் திடீரென சென்டாக் இணையதளம் மீண்டும் முடங்கியது. 2ம் கட்ட  மருத்துவ கலந்தாய்வுக்கு பணம் செலுத்த 6ம்தேதி கடைசி நாளாக  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவும் இணையதளம் இயங்கவில்லை. இதனால்  மாணவர்கள், பெற்றோர்கள் பரிதவித்தனர். இதையடுத்து 2ம் கட்ட  கலந்தாய்வுக்கு பணம் செலுத்த நேற்று (7ம்தேதி) காலை 11 மணி வரை கால அவகாசம்  நீட்டித்து சென்டாக் அறிவிபபு வெளியிட்டது. நேரடி கலந்தாய்வு நடந்தால்கூட இவ்வளவு சிரமத்தை மாணவர்கள் சந்திக்க வாய்ப்பில்லை... இணையதளம் என்ற  பெயரில் ஒவ்வொரு நாளும் அலைக்கழிப்பு நடப்பதால் மருத்துவ கனவில் இருந்த  மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.
 சென்டாக் மருத்துவ கவுன்சலிங் தொடங்கியது  முதல் ஒவ்வொரு காலத்திலும் இணையதளம் முடக்கப்பட்டு பிரச்னைகள் பூதாகரமாகி  வருவதாகவும், இணையதளத்தையே கவனித்துக் கொண்டிருக்கும் நிலைக்கு மாணவர்கள்  தள்ளப்பட்டு இருப்பதாக மாணவர், பெற்றோர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

   இதற்கு காரணமாக சென்டாக் அதிகாரிகள் மீது விரிவான விசாரணை நடத்துவதோடு,  தனியார் கல்லூரிக்கு ஆதரவான செயல்பாடாக இருக்குமோ? என்ற பொதுமக்களின்  ஐயப்பாட்டிற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே சென்டாக் இணையதளம் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொகுதி  எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டு வருகின்றனர்.  இதையடுத்து முன்னாள் எம்எல்ஏக்கள் நேரு, வைத்தியநாதன் ஆகியோர் நேற்று  மதியம் லாஸ்பேட்டையில் உள்ள உயர் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு  மாணவர்களுடன் சென்று முற்றுகையில் ஈடுபட்டனர்.   சென்டாக் இணையதளத்தை  முடக்கி வைத்து விட்டு எப்படி கலந்தாய்வு நடத்த முடியும் என அங்கிருந்த  பணியாளர்களிடம் சரமாரி வினா எழுப்பினர். இதற்கு கால அவகாசம் வழங்காவிடில்  போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தனர்.  பின்னர் அவர்களை  அதிகாரிகள் சாமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு  நிலவியது. 2ம் கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் 3ம் கட்ட கலந்தாய்வை  ஒவ்வொரு தனியார் கல்லூரிகளும் அரசு இடஒதுக்கீட்டில் மீதமுள்ளவற்றை  தாங்களாகவே நிரப்பிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...