முதல் கட்டமாக நாளைமறுதினத்துக்குள் அமைக்க நடவடிக்கை : தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம்

வேலூர்: தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக மாணவர் எண்ணிக்கை குறைந்த 46 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நாளை மறுதினத்துக்குள் நூலகங்களாக மாற்றப்பட்டு தினக்கூலி 315 அடிப்படையில் நூலகர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்த, குறிப்பாக ஒற்றை இலக்க எண்ணிக்கை கொண்ட மாணவர்களை கொண்ட பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு மூடப்படும் பள்ளிகள் படிப்படியாக நூலகங்களாக மாற்றவும், நூலகங்களில் ஆயிரம் புத்தகங்களை வைத்து முழு நேர நூலகங்களாக செயல்பட வைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 46 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நூலகங்களாக மாறுகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பள்ளிகளும் அடையாளம் காணப்பட்டு நூலகங்களாக உருமாறுகின்றன.

Advertising
Advertising

அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் 6 பள்ளிகள், சிவகங்கை மாவட்டத்தில் 4 பள்ளிகள், விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 3 பள்ளிகள், விழுப்புரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தருமபுரி மாவட்டங்களில் தலா 2 பள்ளிகள், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி என 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் என்று கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியதுடன், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி அடையாளம் காணப்பட்ட பள்ளிக்கட்டிடங்களில் நூலகம் அமைக்கும் பணியை நூலக ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. முதலில் மூடப்படும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு நூலகம், மூடப்படும் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்படும். நூலகம் இல்லாத பகுதிகளில் மூடப்படும் பள்ளிகளில் முதல்கட்டமாக 500 புத்தகங்களை கொண்டு நூலகம் தொடங்கப்படும். நாளை மறுதினத்துக்குள் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தகங்களுடன், நூலகம் அமைப்பதற்கான நிதியை நூலக ஆணைக்குழு ஒதுக்கீடு செய்கிறது. அதோடு தொடங்கப்படும் நூலகங்களில் பிளஸ்2 முடித்த அல்லது சிஎல்ஐஎஸ் படிப்பு முடித்தவர்கள் தினசரி கூலி 315 அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். அதோடு தொடங்கப்படும் நூலகம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும் என்றும் பொது நூலகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: